Thursday, September 17, 2009

காலச்சுவடு நூல் தேவிபாரதியின் பிறகொரு இரவு - நூல் வெளியீட்டு விழா : நடந்தது என்ன?


ஈரோடு புத்தகத்திருவிழாவில் நடந்த நிகழ்வுகள் எனக்குள் பல்வேறு மாற்றங்களையும் ஒரு மிகப் பெரிய உத்வேகத்தையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. ஆமாம். புத்தகத்திருவிழாவில் உன்னதம் சென்ற மாத இதழ் 412 பிரதிகள் விற்பனையாகியுள்ளது என்பது இடைநிலைப் பத்திரிகை வரலாற்றில் மாபெரும் சாதனை என்று தான் சொல்ல வேண்டும். 132 சந்தாக்கள் சேர்ந்துள்ள இன்னொரு அதிர்ச்சியையும் இங்கு குறிப்பிட வேண்டும். பல்வேறு புதிய நண்பர்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
உன்னதம் ஒருகாலத்தில் 300 பிரதிகள் மட்டுமே அச்சடித்து வெளிவந்திருக்கிறது. தீவிர இலக்கிய இதழாக வந்து கொண்டிருந்த கட்டத்தில் உன்னதம் ஒரு சிறு குழுவிற்குள்ளேயே நொண்டியடித்துக் கொண்டிருந்தது. தங்களது படைப்பு வந்திருந்தால் அதைப்பற்றிப் பேசுவார்கள். வராமல் போனால், புறம் பேசித்திரிவார்கள். இதுதான் தீவிர இலக்கியச்சூழல். வெறுத்துப் போய் மெதுவாக விலகி மாற்று அரசியல் சூழலுக்குள் நுழைந்ததும், முழுக்க முழுக்க ஒருபுதிய வெளி திறந்து கொண்டது.
புத்தம் புதிய நண்பர்கள், இளைஞர்கள், சமூகப் பிரக்ஞை கொண்டது போல நடிக்காமல், உண்மையாகவே அதுபற்றிய அக்கறையுடன் களச் செயல்பாட்டில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர் கள், தன்னை மட்டுமே முன்னிறுத்திப் பேசும் அருவருப்பான தமிழ் இலக்கியச் சூழலிலிருந்து விலகி, சமூகம் சார்ந்த கருத்துக்களுக்கும், மாற்றுப் பார்வைகளுக்கும் முக்கியத்துவம் தரும் சூழலை இத்தனை காலமும் ஒதுக்கி வைத்திருந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தேன்.
அரசியல் பேசுவது தமிழ் இலக்கியச்சூழலில் அருவருப்பான விடயம் என்று மௌனி, க.நா.சு., வெங்கட் சாமிநாதன் காலத்திலிருந்து அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஆதவன், நகுலன், ஞானக்கூத்தன், நாகார்ஜுனன் (இவரது சமீபத்திய அரசியல் செயல்பாடுகள் மாற்ற மடைந்துள்ளன)... எழுத்து, கசடதபற, ழ, யாத்ரா, என்று தொடர்ச்சியான ஒரு பிம்பத்தைக் கட்டமைத்திருந்தார்கள். (இதை இலக்கிய வெளியில் உடைத்தெறிந்தவர்கள் அ.மார்க்ஸும், ரவிக்குமாரும்.)
முழுக்க முழுக்க நவீனத்துவம் என்கிற பெயரில் மேலை நாட்டுக் கலாச்சாரத்தையும் கலாபூர்வமான எழுத்து முறையையும் அறிமுகப்படுத்தினார்கள். தமிழின் பண்பாட்டு அம்சங்களை அறவே அழித்தொழித்தவர்களில் இவர்களுக்குப் பெரும் பங்குண்டு. அந்தக்கட்டத்தில் இவர்கள் அறிமுகப் படுத்தியதுதான் நவீன இலக்கியம் போன்ற தோற்றத்தை உருவாக்கினார்கள். தமிழில் அதற்கான வேர்கள் இல்லை என்பது போல இவர்கள் உருவாக்கிய கதையாடல்களுக்கு எதிராகக்குரல் கொடுத்த பிரமீளைத் திட்டமிட்டு ‘கிறுக்கு’ என்ற ஒற்றைச் சொற்றொடர் மூலம் அந்த ஆளுமையை மறைத்தார்கள். தமிழ் அரசியல் சமூகப் பிரக்ஞை கொண்ட முற்போக்காளர்கள் யாரும் இவரை ஆதரிக்க வில்லை. ஏனெனில், இவரது கருத்துகளைப் படிக்காதற்கு முன்பே இவரைப்பற்றிய அவதுறுகளை வைத்து ஒருமுக்கியமான தமிழ்ச்சிந்தனையாளரை இழந்திருக்கிறோம்.
தமிழில் தீவிர இலக்கியம் பேசுவதுதான் சீரியஸான விடயம் என்பது போன்ற தோற்றத்தை பார்ப்பனியம் ஏன் உருவாக்கியது என்பதற்கு இன்றைக்கு அதிகமாக வலைத் தளங்களிலும், மெதுவாக அச்சு தளங்களிலும், மாற்று ஊடகங்களிலும் நிறம் மாறிக் கொண்டிருக்கும் எழுத்து வெளியில் பேசும் அரசியல், பெரியாரை முன்னிறுத்தி பார்ப்பனீயத்தின் பல்வேறு நவீனத்துவ, பின்நவீனத்துவப் போக்குகளைத் தோலுரிக்க ஆரம்பித்திருக்கிறது.
இது போன்ற கருத்துக்கள் வரும் என்று தெரிந்துதான் திசைமாற்றி விடுவதற்காக மேலைநாட்டு கலாபூர்வமான இலக்கியம், நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்றெல்லாம் பஜனை பாடிக் கொண்டிருந்தார்கள்.
இது போன்ற விடயங்களைத்தான் நான் காலம் காலமாக எதிர்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த நீண்ட பாரம்பரியத்தில் வரும் கடைக் கொழுந்து காலச்சுவடு என்றும் அதன் செயல்பாடுகளுக்கு எதிரானவன் என்றும் காலச்சுவடு விழாவில் பேசினேன்.
ஈரோட்டில் காலச்சுவடு ஏற்பாடு செய்திருந்த தேவிபாரதியின் ‘பிறகொரு இரவு’ சிறுகதைகள் நூல்வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினேன். அதை காலச்சுவடு இதழில் எழுதியவர் காலச்சுவடுக்கு எதிராக நான் இயங்கி வருவதாக மேம்போக்காக எழுதியிருந்தார். நான் பல வருடங்களாகக் காலச்சுவடுக்கு எதிராக இயங்கும் அளவுக்கு அது ஒன்றும் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. அந்த இதழில் எழுதியுள்ள வாசகத்தை நான் மேற்சொன்ன அகல் விரிவான பார்வையில்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்லாது தேவிபாரதி என்னை அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைத்த போது நான் மறுத்தேன். அவர், ‘நீங்கள் என் நீண்ட நாளைய நண்பர் என்ற பார்வையில் கலந்து கொள்ள வேண்டும்’ என்று கட்டாயப் படுத்தியதின் பேரில் தான் கலந்து கொண்டேன்.
அந்தக்கூட்டத்தில் நான் பேசும்போது ஒரு சுய விளக்கமாக இக்கருத்துக்களை ஓரிரண்டு வார்த்தைகளில் சுருக்கமாகச் சொல்லிய பிறகு தேவிபாரதியின் கதைகளுக்குப் போய்விட்டேன். விரிவாக இன்னும் நிறையப் பேசியிருக்கலாம். அதற்குரிய அரங்கமல்ல அது. அதேசமயம், நான் கலந்து கொண்ட நிலைபாட்டையும் சொல்லியாக வேண்டிய அரங்கமும் அதுதான்.
பேசி முடித்துவிட்டுக் கீழே இறங்கியதும், வாமு.கோமு ஓடோடிவந்து கட்டிப்பிடித்துக் கொண்டு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். நவீன சிறுகதை எழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் பாராட்டினார். இன்னும் பல முகங்கள்...
அதற்கப்புறம் நிறைய பாராட்டுக் கருத்துக்கள் வந்தன. அவர்களைப் பற்றியும் அவர்கள் சொன்ன கருத்துக்கள் பற்றியெல்லாம் பின்னர் எழுதலாம்...