Thursday, September 17, 2009

காலச்சுவடு நூல் தேவிபாரதியின் பிறகொரு இரவு - நூல் வெளியீட்டு விழா : நடந்தது என்ன?


ஈரோடு புத்தகத்திருவிழாவில் நடந்த நிகழ்வுகள் எனக்குள் பல்வேறு மாற்றங்களையும் ஒரு மிகப் பெரிய உத்வேகத்தையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. ஆமாம். புத்தகத்திருவிழாவில் உன்னதம் சென்ற மாத இதழ் 412 பிரதிகள் விற்பனையாகியுள்ளது என்பது இடைநிலைப் பத்திரிகை வரலாற்றில் மாபெரும் சாதனை என்று தான் சொல்ல வேண்டும். 132 சந்தாக்கள் சேர்ந்துள்ள இன்னொரு அதிர்ச்சியையும் இங்கு குறிப்பிட வேண்டும். பல்வேறு புதிய நண்பர்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
உன்னதம் ஒருகாலத்தில் 300 பிரதிகள் மட்டுமே அச்சடித்து வெளிவந்திருக்கிறது. தீவிர இலக்கிய இதழாக வந்து கொண்டிருந்த கட்டத்தில் உன்னதம் ஒரு சிறு குழுவிற்குள்ளேயே நொண்டியடித்துக் கொண்டிருந்தது. தங்களது படைப்பு வந்திருந்தால் அதைப்பற்றிப் பேசுவார்கள். வராமல் போனால், புறம் பேசித்திரிவார்கள். இதுதான் தீவிர இலக்கியச்சூழல். வெறுத்துப் போய் மெதுவாக விலகி மாற்று அரசியல் சூழலுக்குள் நுழைந்ததும், முழுக்க முழுக்க ஒருபுதிய வெளி திறந்து கொண்டது.
புத்தம் புதிய நண்பர்கள், இளைஞர்கள், சமூகப் பிரக்ஞை கொண்டது போல நடிக்காமல், உண்மையாகவே அதுபற்றிய அக்கறையுடன் களச் செயல்பாட்டில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர் கள், தன்னை மட்டுமே முன்னிறுத்திப் பேசும் அருவருப்பான தமிழ் இலக்கியச் சூழலிலிருந்து விலகி, சமூகம் சார்ந்த கருத்துக்களுக்கும், மாற்றுப் பார்வைகளுக்கும் முக்கியத்துவம் தரும் சூழலை இத்தனை காலமும் ஒதுக்கி வைத்திருந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தேன்.
அரசியல் பேசுவது தமிழ் இலக்கியச்சூழலில் அருவருப்பான விடயம் என்று மௌனி, க.நா.சு., வெங்கட் சாமிநாதன் காலத்திலிருந்து அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஆதவன், நகுலன், ஞானக்கூத்தன், நாகார்ஜுனன் (இவரது சமீபத்திய அரசியல் செயல்பாடுகள் மாற்ற மடைந்துள்ளன)... எழுத்து, கசடதபற, ழ, யாத்ரா, என்று தொடர்ச்சியான ஒரு பிம்பத்தைக் கட்டமைத்திருந்தார்கள். (இதை இலக்கிய வெளியில் உடைத்தெறிந்தவர்கள் அ.மார்க்ஸும், ரவிக்குமாரும்.)
முழுக்க முழுக்க நவீனத்துவம் என்கிற பெயரில் மேலை நாட்டுக் கலாச்சாரத்தையும் கலாபூர்வமான எழுத்து முறையையும் அறிமுகப்படுத்தினார்கள். தமிழின் பண்பாட்டு அம்சங்களை அறவே அழித்தொழித்தவர்களில் இவர்களுக்குப் பெரும் பங்குண்டு. அந்தக்கட்டத்தில் இவர்கள் அறிமுகப் படுத்தியதுதான் நவீன இலக்கியம் போன்ற தோற்றத்தை உருவாக்கினார்கள். தமிழில் அதற்கான வேர்கள் இல்லை என்பது போல இவர்கள் உருவாக்கிய கதையாடல்களுக்கு எதிராகக்குரல் கொடுத்த பிரமீளைத் திட்டமிட்டு ‘கிறுக்கு’ என்ற ஒற்றைச் சொற்றொடர் மூலம் அந்த ஆளுமையை மறைத்தார்கள். தமிழ் அரசியல் சமூகப் பிரக்ஞை கொண்ட முற்போக்காளர்கள் யாரும் இவரை ஆதரிக்க வில்லை. ஏனெனில், இவரது கருத்துகளைப் படிக்காதற்கு முன்பே இவரைப்பற்றிய அவதுறுகளை வைத்து ஒருமுக்கியமான தமிழ்ச்சிந்தனையாளரை இழந்திருக்கிறோம்.
தமிழில் தீவிர இலக்கியம் பேசுவதுதான் சீரியஸான விடயம் என்பது போன்ற தோற்றத்தை பார்ப்பனியம் ஏன் உருவாக்கியது என்பதற்கு இன்றைக்கு அதிகமாக வலைத் தளங்களிலும், மெதுவாக அச்சு தளங்களிலும், மாற்று ஊடகங்களிலும் நிறம் மாறிக் கொண்டிருக்கும் எழுத்து வெளியில் பேசும் அரசியல், பெரியாரை முன்னிறுத்தி பார்ப்பனீயத்தின் பல்வேறு நவீனத்துவ, பின்நவீனத்துவப் போக்குகளைத் தோலுரிக்க ஆரம்பித்திருக்கிறது.
இது போன்ற கருத்துக்கள் வரும் என்று தெரிந்துதான் திசைமாற்றி விடுவதற்காக மேலைநாட்டு கலாபூர்வமான இலக்கியம், நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்றெல்லாம் பஜனை பாடிக் கொண்டிருந்தார்கள்.
இது போன்ற விடயங்களைத்தான் நான் காலம் காலமாக எதிர்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த நீண்ட பாரம்பரியத்தில் வரும் கடைக் கொழுந்து காலச்சுவடு என்றும் அதன் செயல்பாடுகளுக்கு எதிரானவன் என்றும் காலச்சுவடு விழாவில் பேசினேன்.
ஈரோட்டில் காலச்சுவடு ஏற்பாடு செய்திருந்த தேவிபாரதியின் ‘பிறகொரு இரவு’ சிறுகதைகள் நூல்வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினேன். அதை காலச்சுவடு இதழில் எழுதியவர் காலச்சுவடுக்கு எதிராக நான் இயங்கி வருவதாக மேம்போக்காக எழுதியிருந்தார். நான் பல வருடங்களாகக் காலச்சுவடுக்கு எதிராக இயங்கும் அளவுக்கு அது ஒன்றும் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. அந்த இதழில் எழுதியுள்ள வாசகத்தை நான் மேற்சொன்ன அகல் விரிவான பார்வையில்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்லாது தேவிபாரதி என்னை அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைத்த போது நான் மறுத்தேன். அவர், ‘நீங்கள் என் நீண்ட நாளைய நண்பர் என்ற பார்வையில் கலந்து கொள்ள வேண்டும்’ என்று கட்டாயப் படுத்தியதின் பேரில் தான் கலந்து கொண்டேன்.
அந்தக்கூட்டத்தில் நான் பேசும்போது ஒரு சுய விளக்கமாக இக்கருத்துக்களை ஓரிரண்டு வார்த்தைகளில் சுருக்கமாகச் சொல்லிய பிறகு தேவிபாரதியின் கதைகளுக்குப் போய்விட்டேன். விரிவாக இன்னும் நிறையப் பேசியிருக்கலாம். அதற்குரிய அரங்கமல்ல அது. அதேசமயம், நான் கலந்து கொண்ட நிலைபாட்டையும் சொல்லியாக வேண்டிய அரங்கமும் அதுதான்.
பேசி முடித்துவிட்டுக் கீழே இறங்கியதும், வாமு.கோமு ஓடோடிவந்து கட்டிப்பிடித்துக் கொண்டு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். நவீன சிறுகதை எழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் பாராட்டினார். இன்னும் பல முகங்கள்...
அதற்கப்புறம் நிறைய பாராட்டுக் கருத்துக்கள் வந்தன. அவர்களைப் பற்றியும் அவர்கள் சொன்ன கருத்துக்கள் பற்றியெல்லாம் பின்னர் எழுதலாம்...

Tuesday, September 15, 2009

ராணா தாஸ்குப்தாவின் கிளிகளும் எஸ்.ராமகிருஷ்ணனும்


ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் வந்திருந்தார். உன்னதம் ஸ்டால் போட்டிருக்கிறது என்று தெரிந்து கொண்டு நேராக என்னைத் தேடிவந்து விட்டார். அவர் வருவது தெரிந்ததும், அந்தச் சந்திப்பைத் தவிர்த்தவாறு சட்டென்று மறைந்து போய்விட்டேன். பனிப்போரின் பல்வேறு சங்கடங்கள் எனக்குள் இருந்தன. அவர் என்னைத் தேடிப் பார்த்து விட்டு வேறு ஸ்டால்களுக்குப் போய்விட்டார். பிறகு நான் ஸ்டாலுக்குத் திரும்பி வந்து உட்கார்ந்திருந்தபோது, தோளின் மீது ஒரு கரம், “சித்தார்த்தன்...” திரும்பிப் பார்த்தால்... எஸ்.ரா. சட்டென்று இறுக்கம் விலகி மனசு நெகிழ்ந்து போயிற்று. ஒருகணத்தில் கட்டுக்கடங்கா எண்ணஓட்டங்கள் உள்ளோடிச் சுரந்தன. பிரியமுடன் அவரது கை பற்றினேன்.
புற வெளியில் பேசப்பட்ட சொற்கள் ஒருபுறம், அகவெளியில் பேசப்படாத உணர்வுகள் மறுபுறமாக நகர்ந்து கொண்டிருந்தோம்.
அவரிடம் உரையாடிக் கொண்டிருந்த பொழுது, சமீபத்தில் படித்த நல்ல நாவல் குறித்துச் சொல்லுங்கள் என்றேன். ராணா தாஸ்குப்தாவின் ஸோலோ என்கிற நாவல் குறித்து மிகவும் சிலாகித்துப் பேசினார். நாவலின் கதைத்தளம் குறித்து விரிவான விளக்கத்துடன் அவர் பேசப்பேச, என் அக்குளில் சிறகுகள் முளைக்க ஆரம்பித்தன.
அருகி மறைந்து கொண்டிருக்கின்ற மொழிகளைக் காத்துச் சேகரிக்கும் ஒருவர், தன்னிடமுள்ள 20 கிளிகளுக்கு இது போன்ற 20 அபூர்வ மொழிகளைக் கற்றுக் கொடுக்கிறார். பிறகு அந்தக் கிளிகளுடன் கப்பலில் பயணம் ஆகிறார். நடுக்கடலில் கப்பல் உடைந்து கிளிகள் கூண்டிலிருந்து வெளியேறிப் பறந்து விடுகின்றன.
அதன்பிறகு நாவலின் மேஜிக்கல் ரியலிஸம் ஆரம்பிக்கிறது. அந்தக் கிளிகள் என்னவாயின? அந்தக் கிளிகளுக்குள் உள்ள மொழிகளின் நிலை என்ன? இப்படிப் பல்வேறு புதிர்வழிச் சுழல்களுடன் நாவல் தளம் நகர்கின்றது. இதுமட்டுமல்லாமல் கூடவே பல்கேரிய அரசியல் பின்னணியும் நகர்கின்றது...
என்று எஸ்.ரா. அவருக்கே உரித்தான சொற்களில் சொல்லச் சொல்ல எனக்கு அன்று இரவு உறக்கமில்லை.
கூகுளின் உதவியுடன் ராணா தாஸ்குப்தாவின் மாந்திரீக யதார்த்தவாத உலகம் தீராத பக்கங்களுடன் திறந்து கொண்டது.
இந்த வருட புக்கர் பரிசுக்கான பட்டியலில் இந்நாவல் 7 வது இடத்தில் உள்ளது. நவீன தமிழ் வாசகனுக்குச் சற்றே அறிமுகமான முக்யமான நாவலாசிரியர் ஏ.எஸ்.பைட் 21 வது இடத்தில் உள்ளார்.
மார்க்வெஸ்ஸின் ஒரு நூற்றாண்டு வருடத்துத் தனிமையின் மேஜிக்கல் ரியலிஸம் ராணாவை பெரும் பாதிப்பேற்படுத்தியிருக்கிறது என்பதை இந்த நாவலுக்கு வந்துள்ள விமர்சன மதிப்புரைகளை வைத்துப் புரிந்து கொண்டேன்.
அவருடன் உரையாட வேண்டும் என்ற எண்ணம் கட்டுக்கடங்காமல் அலைந்தது. சட்டென்று Face Book குக்குப் போய் அவரது மின்னஞ்சல் முகவரி பிடித்து ஒரு அஞ்சலைத் தட்டி விட்டேன்.
மிகச்சரியாக 23 நிமிடங்கள். முழுசாக வந்து சேர்ந்தது பதில். தமிழ் எழுத்தாளத் திலகங்கள் ஏற்படுத்தியிருந்த பாதிப்பில் நான் ஒரு கணம் விக்கித்துப் போனேன்.
அவரது நாவல் குறித்து உன்னதம் இதழில் எழுதுவதாகவும், இயலும் பட்சத்தில் அவர் ஒரு நேர்காணல் தரமுடியுமா என்றும் வினவினேன்.
உடனே கேள்விகளை எழுதி அனுப்புங்கள் என்றார். எனக்குப் பதட்டம் எகிறியது.
எனது டெல்லி நண்பருக்கு மின்னஞ்சல் அனுப்பி அவரது ஸோலோ நாவலை வாங்கி நண்பர் மோகன ரவிச்சந்திரனிடம் கொடுத்து, உடனே ஒரே மூச்சில் முழுக்கப் படித்து விமர்சன பூர்வமான கேள்விகளைத் தயார் செய்யுங்கள் என்று ஒப்படைத்தேன்.
இரண்டு நாட்களில் கேள்விகள் தயார்.
அடுத்த 24 வது மணி நேரம் பதில்கள் வந்து சேர்ந்தன.
ஒரு சீரிய பத்திரிக்கைக்குத் தேவை இதுதானே...
சென்னையிலிருந்துதான் ஒரு பத்திரிக்கை நடத்த வேண்டும் என்கிற பிம்பத்தை இந்த இதழ் முற்றாக உடைத்தெறிந்திருக்கிறது. உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கிப் போய்விட்டது என்பதை நவீன தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் நம் வாழ்வில் பங்கு கொண்டபடி சொல்லிப் பொகின்றன.
எதற்காகச் சென்னை மாநகரத்துக்குப் போகவேண்டும்? ஆலத்தூர் என்னும் வரப்பட்டிக்காட்டின் வெளியிலும் ராணா தாஸ்குப்தாவின் கிளிகள் பறந்து கொண்டுதான் இருக்கின்றன. எஸ்ராவுக்கு நன்றி சொல்லியவாறே நானும் அவைகளுடன் கதைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்...

Monday, September 7, 2009

உன்னதம் - செப்டம்பர் 2009 இதழ் மனித உரிமை மீறல் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது
நான்ஜிங் படுகொலை: வாழ்வும் மரணமும்
சீனத்திரைப்பட இயக்குனர் லூ சுவான்

இந்தக் கிருமிகளையே, தடுப்பு மருந்துகளாக மாற்றி அவற்றை அதிக விலைக்கு விற்கத் தொடங்கும் - லாரி காரெட்
வைரஸ் கூட்டணி அபாயம் - ரவிக்குமார்
பன்றிக் காய்ச்சலின் பின்னாலுள்ள அரசியல் - கௌதமசித்தார்த்தன்
பிரம்படிச்சட்டம்: இரு பெண்கள்
- லதா ராமகிருஷ்ணன்


திசநாயகம்: ஊடகவெளியின் எதிர்ப்புக்குரல்
- வாசுதேவன்
காலச்சுவடு கருத்தரங்கு: நடந்தது என்ன?

அரசியல் பேசுவது தமிழ் இலக்கியச் சூழலில் அருவருப்பான விடயம் என்று மௌனி, க.நா.சு., வெங்கட் சாமிநாதன் காலத்திலிருந்து அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஆதவன், நகுலன், ஞானக்கூத்தன், நாகார்ஜுனன் (இவரது சமீபத்திய அரசியல் செயல்பாடுகள் மாற்றம டைந் துள்ளன)... எழுத்து, கசடதபற, ழ, யாத்ரா, என்று தொடர்ச்சியான ஒரு பிம்பத்தைக் கட்டமைத்தி ருந்தார்கள். (இதை இலக்கிய வெளியில் உடைத்தெறிந்தவர்கள் அ.மார்க்ஸும், ரவிக்குமாரும்.)

ஜெயமோகனின் உளறல்கள்

இவையெல்லாம் முற்போக்காளர்களால் கடும் விமர்சனத்துடன் எதிர் கொள்ளப் படும் என்பது அவருக்குத் தெரியாத அளவுக்கு அவர் பச்சப் புள்ளை அல்ல. அவர்களது வாதத்தையோ, விமர்சனத்தையோ ஒரு மயிரளவுக்குக் கூட கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை…….
போற போக்கிலே பேசிக் கொண்டு போகிற மடத்தனம் போல கருத்துக்களை உதிர்க்கும் அரைவேக்காட்டுத்தனத்தை இவர் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.அதிகாரத்தின் முட்முகாம்கள்: ஒரு நேரடிப் பார்வை
- தீபச்செல்வன்ஈரான்: தொடரும் தூக்குத் தண்டனைகள் - வாசுதேவன்
என் நாவல் மேஜிக்கல் ரியலிஸம் இல்லை
ராணா தாஸ்குப்தா
தனிமையில் உலவும் பாத்திரம் - மோகன ரவிச்சந்திரன்பெண்களுக்கெதிரான சட்டம்: இரு நாடுகள் - ரெங்கநாயகி


பத்திரிகைச் சுதந்திரம்:
இரு விடுதலைகள் - செல்வ புவியரசன்லிபரான் கமிஷன்:
வலியுடன் கூடிய காத்திருப்பு - ராம் புனியானிஅடையாளங்களை அழித்தல் -டிசே தமிழன்
MG Vassanji யின் The Assassin's Song - ஐ முன் வைத்துசிறுகதைகள்
பத்து சிறு துண்டுகள் - அலெக்ஸ் எப்ஸ்டீன் (செ.ஜார்ஜ்)
சாலைகள் வளைந்து செல்கின்றன... - எச்.பீர்முஹம்மது

கவிதைகள்
எம். ரிஷான் ஷெரீப், கோகுலக் கண்ணன்
பொன்.வாசுதேவன், ஜெயதேவன், அனுஜன்யா
விஸ்லாவா சிம்போர்ஸ்கா (சன்னாசி)
தனி இதழ் ரூ. 20 ஆண்டுச் சந்தா ரூ. 200உன்னதம் ஆலத்தூர் அஞ்சல் கவுந்தப்பாடி-638 455 ஈரோடு மாவட்டம். தமிழ்நாடு இந்தியாதொலைபேசி : 04256 - 243244 அலைபேசி : 9940786278unnatham@gmail.com